டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கான திருத்திய அறிவுரைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விண்ணப்பதாரர்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட அறிவுரைகளை தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in,www.tnpscexams.net, www.tnpscexams.in) வெளியிட்டுள்ளது.தமிழ், ஆங்கிலத்தில் அறிவுரைகள் உள்ளன. மொத்தம் 27 அறிவுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவுரைகள் வருமாறு:
* அரசு பணிகள் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் தேர்வாணைய இணையதளத்திலும், செய்தித்தாள்களிலும் வெளியிடப்படுகிறது. அவ்வாறு வெளியிடப்படும் காலிப்பணியிடங்களுக்கான எண்ணிக்கை தோராயமானதாகும். தேர்வு பணிகள் இறுதியாகும் வரை அவை எந்த நேரத்திலும் மாறுதலுக்கு உட்பட்டதாகும்.
CLICK HERE - TNPSC NEW INSTRUCTION & RULES
* தேர்வுக்கு www.tnpsc.gov.in,www.tnpscexams.net, www.tnpscexams.inஆகிய தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
* எந்த ஒரு பதவிக்கும் விண்ணப்பிக்கும் முன்பு ஒருமுறைப்பதிவு எனப்படும் நிரந்தரப்பதிவு மற்றும் தன் விவரப்பக்கம் ஆகியன கட்டாயமாகும். ஒருமுறைப்பதிவு, பதிவு செய்த நாள் முதல் 5 ஆண்டுகள் நடை முறையில் இருக்கும். ஒரு முறைப்பதிவு செய்வதற்கு பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் எண் ஆகியவை கட்டாயமாகும். மின்னஞ்சல், செல்போன் எண் ஆகியவற்றை தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தேர்வு தொடர்பான செய்திகள் அனைத்தும் விண்ணப்பதாரர் பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் எண்ணுக்கு மட்டுமே அனுப்பப்படும்.
* கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது தாமதமோ அல்லது தொழில்நுட்ப சிக்கலோ எழ வாய்ப்புள்ளது. இது போன்ற காரணங்களால் கடைசி கட்ட நாளில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பாகாது.
18 வயதை நிறைவு செய்யாதவர், கருணை அடிப்படையிலான நியமனம் உள்ளிட்ட யாதொரு பணி தொகுதிக்கும் நேரடி நியமனம் மூலமாக நியமனம் செய்ய தகுதியற்றவராவார்கள்.
* தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர்களிடம் ஆதரவை பெற கடிதத்தின் மூலமாகவோ அல்லது ஏவரேனும் உறவினர், நண்பர், காப்பாளர், அலுவலர் அல்லது வேறொருவர் மூலமாக செல்வாக்கை செலுத்த முயற்சித்தால் விண்ணப்பதாரர்கள் அத்தேர்வுக்கு தகுதியற்றவராக ஆக்கப்படுவர்.
* விண்ணப்பதாரர்கள் தேர்வு கூடத்தில் ஏதாவது ஒழுங்கீனச் செயலில் ஈடுபடுதல், அதாவது மற்ற விண்ணப்பதாரர்களுடன் கலந்தாலோசிப்பது, மற்றவர்களின் விடைத்தாள்களை பார்த்து எழுதுவது, குறிப்புகள் கொண்டுவருவது, தேர்வுக்கூட கண்காணிப்பாளர் அல்லது மற்றவர்கள் உதவியை நாடுவது போன்றவை தடை செய்யப்படுகிறது. இதனை மீறுபவர்கள் தேர்வு கூடத்தை விட்டு வெளியேற்றப்படுவர். அது மட்டுமல்லாமல் அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும். அந்த தேர்வு மற்றும் எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொள்ளவும் தகுதியற்றவராக்கப்படுவர்.
* தேர்வு கூடத்துக்கு ஹால் டிக்கெட்டை எடுத்து செல்ல தவறுவது இரண்டு மதிப்பெண் குறைத்தல் அல்லது விடைத்தாளை செல்லாததாக்குதல் போன்றவற்றிற்கு வழிகோலும். அவ்வாறான ஒவ்வொரு நேர்விலும் தேர்வாணையம் தகுதியின் அடிப்படையில் எது சரியெனப்படுகிறதோ அவ்வாறு முடிவு எடுக்கும் உள்ளிட்ட அறிவுரைகள் இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment