Saturday, June 27, 2015

30 ஆம் தேதி நடைபெறும் SSA கணினி விவரப்பதிவாளர் காலிப்பணி - விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது


அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையங்களில் காலியாகவுள்ள கணினி விவரப்பதிவாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு வரும் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு பாச்சல் பாவை பொறியியல் கல்லூரியில் நடைபெறும் என அறிóவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் 29 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நாமக்கல் தேற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி திட்ட மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு
நேரில் சென்று அழைப்பாணையின் நகல் பெற்றுக் கொள்ளலாம்.
தகுதியில்லாத நபர்கள் அதற்கான காரணத்தினை மாவட்ட திட்ட அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் தெரிந்துகொள்ளலாம். நேரில் வர இயலாதவர்கள் மாவட்ட திட்ட அலுவலகத்தின் தொலைபேசி எண் 04286-227194 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு காரணத்தினை அறிந்து கொள்ளலாம்.
மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, June 13, 2015

ஆய்வக உதவியாளர் தேர்வு 'ரிசல்ட்' தாமதமாக வாய்ப்பு


ஆய்வக உதவியாளர் பதவிக்கான தேர்வில், கணினி வழி விடைத்தாள் திருத்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால், தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என, தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளின் ஆய்வகங்களில் காலியாக உள்ள, 4,362 உதவியாளர் பணி இடங்களுக்கு, நியமன நடவடிக்கை துவங்கி உள்ளது. எழுத்துத் தேர்வு, மே, 31ம் தேதி நடந்தது; 8.84 லட்சம் பேர், தேர்வு எழுதினர்.
ஆனால், 'இந்த மதிப்பெண் இறுதிப் பட்டியலுக்கு கணக்கிடப்படாது; நேர்முகத் தேர்வு மதிப்பெண்ணே கணக்கிடப்படும்' என, தேர்வு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், எழுத்துத் தேர்வு எதற்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.தேர்வர்கள் சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு முடியும் வரை, தேர்வு முடிவை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுஉள்ளது.
இதற்கிடையில், எழுத்து தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம் துவங்கி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 'ஓ.எம்.ஆர்., ஷீட்' என்ற கணினிக் குறியீடு விடைத்தாள், தானியங்கி கணினி விடை திருத்த முறையில் திருத்தப்பட்டுள்ளன. ஆனால், மதிப்பெண் பட்டியலிடும் பணி துவங்கவில்லை. வழக்கின் முடிவுக்கு ஏற்ப, மதிப்பெண் பட்டியலிடும் பணி துவங்கும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Tuesday, June 9, 2015

அரசு வேலையில் வயது வரம்பு சலுகை காட்ட முடியாது-உயர் நீதிமன்ற மதுரை கிளை


அரசு வேலைவாய்ப்பில், வயது வரம்பு சலுகை காட்ட முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தேனி, பெரியகுளம், கெங்குவார்பட்டியைச் சேர்ந்த கனி என்பவர் தாக்கல் செய்த மனு:
கனரக வாகனம் ஓட்ட உரிமம் பெற்று, கடந்த, 2002ல், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். 13 ஆண்டுகளாக, எந்த நேர்காணலுக்கும் அழைக்கவில்லை.
கடந்த, மே, 1ல், மருத்துவப் பணிகள் நியமன தேர்வு வாரியம், டிரைவர் பணிக்கு அறிவிப்பு வெளியிட்டது. அதில், வயது வரம்பு, 35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட பதிவு மூப்பு பட்டியலில், என் பெயர் இல்லை. ஜூலை, 1ம் தேதியை தகுதியாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை விட, 24 நாட்கள் கடந்ததாகக் கூறி, நிராகரித்தனர்.
வயது வரம்பை தளர்த்தி, நேர்காணலில் பங்கேற்க அனுமதித்து, பணி நியமனம் வழங்க, கலெக்டர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்திருந்தார்.
இதை விசாரித்து, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:மனுதாரருக்கு, ஜூலை, 1ம் தேதி நிலவரப்படி, 24 நாட்கள் வயது வரம்பு கடந்து விட்டது. மனுதாரருக்கு மட்டும், சலுகை காட்ட முடியாது. வயது வரம்பு உட்பட, நிர்வாக முடிவுகளில், தலையிட முடியாது. சலுகை வழங்கினால், மனுதாரர் போல், பாதிக்கப்பட்டுள்ள பலர் சலுகை கோருவர்; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்