Tuesday, October 21, 2014

TNPSC : 5,000 அரசு பணிக்கு இதுவரை விண்ணப்பித்தோர் 3 லட்சம்: 12 லட்சம் பேர் போட்டி போடுவர் என எதிர்பார்ப்பு
தமிழக அரசின் பல துறைகளில் காலியாக உள்ள, 4,963 குரூப் 4 நிலையிலான வேலைக்கு, கடும் போட்டி எழுந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) அறிவிப்பு வெளியிட்ட ஒரு வாரத்தில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். இறுதியாக, 12 லட்சம் பேர், மனு தாக்கல் செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர் உட்பட, 4,963 இடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை, கடந்த 14ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. அன்றைய தேதியில் இருந்தே, www.tnpsc.gov.inஎன்ற இணையதளம் வழியாக, போட்டி போட்டுக்கொண்டு, விண்ணப்பித்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில், பதிவு செய்தோர் எண்ணிக்கை, 3 லட்சத்தை தாண்டியதாக, துறை வட்டாரம் தெரிவிக்கிறது. விண்ணப்பிக்க, நவ., 12ம் தேதி கடைசி நாள். அதற்குள், மேலும், 9 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.போட்டித் தேர்வு, டிச., 21ம் தேதி நடக்கிறது. 10ம் வகுப்பு கல்வித்தகுதி நிலையில் நடத்தப்படும் தேர்வு என்பதால், ஒவ்வொரு முறையும், அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர். சராசரியாக, 12 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். தேர்வில், 8 லட்சம் முதல், 9 லட்சம் பேர் வரை பங்கேற்கின்றனர். இந்த முறையும், மொத்தமாக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை, 11 லட்சத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.