Tuesday, September 6, 2016

TNPSC:குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி


டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (செப். 8) கடைசி நாளாகும். இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் உள்ள 5,451 காலியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) ஆகஸ்ட் 9-இல் வெளியிட்டது.
இதற்காக www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர்.
18 வயது பூர்த்தியந்தவர்கள் தேர்வை எழுதலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் 35 வயதுக்குள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயதுக்குள்ளும், பிற வகுப்பைச் சேர்ந்தோர் 30 வயதுக்குள்ளும் இருந்தால் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி அவசியம்: குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியாகும். அதில், தட்டச்சர் பதவிக்கு தமிழ்-ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழ் முதுநிலை-ஆங்கிலம் இளநிலை அல்லது ஆங்கிலம் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு விவரம்: எழுத்துத் தேர்வானது நவம்பர் 6-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். மொத்த மதிப்பெண்கள் 300. தேர்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்புத் தரத்தில் கேள்விகள் கேட்கப்படும். அதில், பொது அறிவுப் பிரிவில் 75 கேள்விகளும், திறனறிவு பிரிவில் 25 கேள்விகளும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பிரிவில் 200 கேள்விகளும் கேட்கப்படும். தேர்வு பாடங்களுக்கான பாடத்திட்டம், தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 லட்சத்துக்கும் அதிகம்: தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் வியாழக்கிழமையாகும் (செப். 8). மேலும், வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணத்தைச் செலுத்த செப். 11 கடைசியாகும். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
"இன்னும் மூன்று நாள்கள் வரை அவகாசம் இருப்பதால் தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஏழாவது ஊதியக் குழு அறிவிப்பு போன்ற அரசின் நடவடிக்கைகளால் அதிக ஆர்வம் உள்ளதால், விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொடும்' என டி.என்.பி.எஸ்.சி. அலுவலர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment