Saturday, January 21, 2017

போலி சான்றிதழ் தயாரித்தவருக்கு தேர்வு எழுத தடை!

மதிப்பெண் சான்றிதழை திருத்திய, சென்னை வாலிபருக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுத, ஏழு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு துறைகளில், ’குரூப் - 2 ஏ’ பிரிவில், நேர்காணல் அல்லாத பணிகளில் உள்ள, காலி இடங்களை நிரப்ப, 2016 ஜன., 24ல் எழுத்து தேர்வு நடந்தது. 
இதில், தேர்ச்சி பெற்றோருக்கு, நவ., 21 முதல், டிச., 2 வரை, பணி ஒதுக்கீட்டு கவுன்சிலிங் நடந்தது. பின், தேர்வு பெற்றோரின் மதிப்பெண் பட்டியல், www.tnpsc.gov.in  என்ற, இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மதிப்பெண் சான்றிதழில், ஒருவர் முறைகேடாக திருத்தம் செய்துள்ளதாக, அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. விசாரணையில், சென்னை, அண்ணா நகரை சேர்ந்த, நித்தியானந்தத்தின் மகன் பிரேம், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், தன் மதிப்பெண்ணை திருத்தி, போலி சான்றிதழ் மூலம், முறைகேடாக பணியில் சேர முயன்றது தெரிய வந்தது.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் விடுத்த செய்திக்குறிப்பு: 
மதிப்பெண்ணை திருத்தி, போலி சான்றிதழ் தயாரித்தது தொடர்பாக, தேர்வர் பிரேம், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுத, ஏழு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், அவர் மீது, சென்னை போலீசில், மோசடி புகார் தரப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment